ஒரு மாத காலமாக நான் எழுதி வந்த இந்த நினைவோடை என்கிற தொடர் 12 பகுதிகளோடே முற்றுப் பெற்றுவிட்டது. எனக்கான, நான் பார்த்த பல சம்பவங்கள் ஏற்கனவே சிறுகதை வடிவில் பலவற்றை எழுதிவிட்டேன். மிச்சம் மீதி இருப்பவைகளை நினைவடுக்கிலிருந்து வெளிக்கொணர முடியவில்லை. தொடர்ந்து எழுத ஆசை தான் என்றாலும் இந்த ஒரு மாத காலத்தில் ஒரு சிறுகதை முயற்சிகூட நான் செய்யவில்லை. இருந்தும் நண்பர் மனுஷ்யபுத்திரன் கேட்டதற்கிணங்க முயற்சிப்போமென முயற்சித்தேன். தொடர் வடிவில் நான் இதுவரை எந்தப் படைப்புகளையும் எழுதவில்லை. முடியுமா? என்று எனக்கு நானே சோதித்துக்கொண்ட அனுபவம் மகிழ்ச்சியாகவே இருந்தது. வாய்ப்பளித்த உயிர்மை இணையதளத்திற்கு நன்றி.

நேற்று பஜாஜ் டிஸ்கவரில் மனையாளோடு திங்களூர் சென்று கொண்டிருந்தேன். உறவில் குழந்தை பிறப்பொன்று நிகழ்ந்தபோது மனையாளோடு சென்று மருத்துவமனையில் பார்த்து வந்தது. அதன் பிறகாக குழந்தையை சென்று தனித்து அவர்கள் வீடு சென்று பார்க்கவில்லை. இருந்தும் இப்போது திங்களூர் வந்திருப்பதாக சொன்னதால் நானும் மனையாளும் கிளம்பிவிட்டோம். விஜயமங்கலம் தாண்டி வீரசங்கிலி பிரிவு நான்குமுனை சந்திப்பில் கிழக்கிலிருந்து வீரசங்கிலிக்கி செல்ல 15 வயது மதிக்கத்தக்க பாப்பா எக்ஸெல் சூப்பரில் பின்னால் தன் தங்கையோடு வந்தது. என்னைப் பார்த்தும் போலாமா, வேணாமா குழப்பத்தில் தீ மாதிரி வண்டியை முறுக்கிவிட்டது.

5 கியர் வண்டியை 50-ல் ஓட்டும் நான் சமீப காலத்தில் 2 நண்பர்களை இழந்துவிட்டதால் என் ஓட்டத்தை 43-க்கு குறைத்துவிட்டேன். நானும் குழம்பி பிரேக் பிடித்து நிறுத்திவிட்டேன். பாப்பா சூப்பராய் சாலையை கடந்து சென்று தொப்புகடீரென விழுந்துவிட்டது. அடப்பிள்ளையே! அதான் தீ மாதிரி தாண்டிட்டியே, அப்புறம் ஏன் விழுந்து நொறுங்கினே? நான் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு, பாப்பாவிடம் செல்கையில் அது எழுந்து பின்புறத்தை தூசிதட்டி வண்டியை எழுப்பி நிறுத்தி கிளம்பிவிட எத்தனித்தது. நல்லவேளை 2 பாப்பாக்களுக்கும் காயமேதுமில்லை.

என்ன செய்திருப்பேன் என்கிறீர்கள்? 15-வயது பாப்பாவின் கன்னத்தில் ரெண்டு அப்பட்டம் போட்டேன். “இனிமே வண்டியே ஓட்டப்புடாது நீ, உருட்டீட்டு போ” என்றேன். அந்தப் பாப்பா உதடு பிதுக்கியது. “உங்கொப்பா நெ இருக்குதா? குடு நான் பேசுறேன்!” என்றேன். பாப்பா மண்டைய ஆட்டியது. நான் என் வண்டிக்குத் திரும்பினேன். “பாவமுங்க, அந்தப் புள்ளைய ஏன் அடிச்சீங்க?” என்றாள் மனையாள். “நீ சித்த கம்முனிரு!” என்று வண்டியைக் கிளப்புகையில் அவர்களும் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

பெற்றவர்களே! பாப்பாக்கள் கையில் வண்டியைக் கொடுத்து கோதுமை அரைக்கவோ, தக்கோளி வாங்கவோ அனுப்பாதீர்கள் சாலையில்! உயிர்பலிகள் நடக்கின்றன என்றால் ஏன் நடக்காது?

பிறந்த வீடு செல்கையில் திண்பண்டங்களோடு செல்வதில் ஆர்வமாயிருக்கும் மனையாள் திங்களூரில் ஒரு பேக்கரில் மூட்டை கட்டிக்கொண்டாள். உறவு வீடு போய் வாசலில் நின்றதுமே, “பெரியப்பன் வந்தாச்சு சாமி” என்று என் கையில் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்தது. ‘பெரியப்பனை அடையாளம் பாக்குறான்’ என்றார்கள். ‘இந்த நேரத்துக்கு யாரா இருந்தாலும் மூஞ்சில குத்து உட்டுருப்பானுங்க… தேனோ இன்னம் கையை ஓங்கவே மாட்டீங்றானே… தேஞ்சாமி பெரீப்பனுக்கு குத்து உடலியா?’ என்றார்கள். எனது காமிரா செட்டை எடுத்து பாடல் வைத்து அதன் கையில் கொடுத்துவிட்டேன். நின்றிருந்த உறவு சனங்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.  ‘கீழ போட்டுடுவானுங்க.. வாங்கிக்குங்க’ என்றே சப்தமிட்டார்கள்.

குழந்தை செல்போன் பட்டன்களை விரல்களில் அழுத்திப் பாடலை நிறுத்தியது. பின் பாடலைப் போட்டது. பாடல் வந்ததும் நிறுத்தியது. ‘வெலை அதிகமாட்ட இருக்குது புடிங்குக்குங்க.’ என்று அதன் அப்பாவும் பரபரப்பாய் சொன்னார். இவர்கள் வீணே கலவரமாகிறார்கள் என்றே தோன்றியது. நைசா வாங்கி வேறு ஜோப்பில் போட்டுக்கணுமாம்! குழந்தை அரைமணி நேரம் என் கையில் இருந்தது. அது கீழே போடவேயில்லை. பாடலை எப்படி வைப்பது என்று கற்றுக்கொண்டுவிட்டது. எழுத்தாளர்கள் என்பவர்களுக்குள் நிறைய கிறுக்குத்தனங்கள் உண்டு. நான் 25 வருடங்களுக்கும் மேலாக கிறுக்குத் தனங்களோடுதான் வாழ்கிறேன். என்னை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் தொடங்கிவிட்டேன்.

மொத்த பூமியுமே விளையாட்டு மைதானம்தான். வாழ்க்கையை நாம் எல்லோருமே விளையாட்டாக பார்க்கவோ, எதிர்கொள்ளவோதான் வேண்டும். விளையாட்டுத்தனம் இல்லாமல், குழந்தைத்தனம் இல்லாமல் வாழ்க்கையை கடினமாக எதிர்கொள்பவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல்தான் வருகிறது. வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்பவன்தான் முழுமையாகச் சாகிறான். அதுதான் அழகு. சாவு என்பது மிக அசிங்கமானது. அது சாவினால் அல்ல. முழுமையாக வாழாததினால்தான் அது அசிங்கமாகிறது. அழகான சாவை சம்பாதிக்க முடியாது. முழுமையாக வாழ்ந்தால்தான் சாவு சுகமானது என்பதை உணரமுடியும். முழுமையாக வாழாததால்தான் சாவுக்காக பயந்து பயந்து எல்லோரும் அதைப்பற்றிய பீதியில் வாழ்கிறார்கள்.

ஒருமுறை வெகு காலம் பிறகாக ஃபிகர் பார்க்கும் வாய்ப்பை அரங்கன் தமிழ் ஏற்படுத்தித் தந்தார். ஈரோட்டு வீதியில் 20 நிமிடம். அவரைச் சந்திக்க மணி லாட்ஜ் வாயிலுக்குச் சென்றபோது, துணி அயர்ன் செய்ய சென்றிருப்பதாகவும் 10 நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் அலைபேசியில் அறிவித்தார். அவர் வந்து சேரும்வரை சாலையில் ஃபிகர் பார்க்கும் படலத்தைத் துவங்கினேன். 30 ஃபிகர்களுக்கும் மேலாக கடந்துசென்றன. வேலை நிமித்தமாக கடந்துசென்ற அந்த ஃபிகர்கள் எல்லாமே சரியாக சோறே தின்பதில்லை போலும். நெருங்கி இறுக்கி கட்டிக்கொண்டால் படக் படக்கென ஒடிந்து புலக்கை தீசி விடும்கள். இரண்டாய் ஒடித்து டீயில் பன்போல தொட்டு சாப்பிடலாம்போல ஒல்லி பிச்சான்கள்.

ஒருவர் அதை தடைசெய்வதுபோல் எதிர்க்கே வந்து 5 ரூவா குடு சார் என்றார். இல்ல போடா, என்றேன். 5 ரூபாய் சில்லறை எடுத்தபடி, 10 ரூவா நோட்டு குடு சார், சில்லறை 5 தர்றேன், என்றார். போடா! என்று மீண்டும் சொன்னதும் நகர்ந்தார். 5வது நிமிடத்தில் என் கவனத்தை திருப்ப தோள் தட்டி 5 ரூவா குடுப்பா என்று ஒரு பெரியவர். என்ன ஈரோட்டில் எல்லோருமே ஐந்து ரூபாய்தான் கேட்பார்களா? ஜீன்ஸ் பேண்ட் வொயட் சர்ட் சகிதமாய் அவர் நின்றிருக்க, அவருக்கும் போடா! தான்.
அருகில் இருந்த ரீசார்ஜ் கடையில் கொளு கொளு பிகர் இருக்க, ‘மேடம் 10 ரூவா வொடாபோன் கார்டு குடுங்க’, என்றேன். வாங்கியதும் 1 ரூவா குடுங்க என்றாள், ஒரு கை நீட்டியபடி! 2-கையையும் நீட்டுங்க மேடம், என்றேன். எதுக்கு? என்று கொந்தளித்தாள். ‘1 ரூவா பிச்சைதானே மேடம் அதான் நீட்ட சொன்னேன்’, என்றேன். வேண்டாம், என்றாள். ஒருவேளை அவள் நான் சைட் உட்டதுக்காக கம்பெனி சார்ஜ் 1 ரூவா கேட்டிருப்பாளோ! இந்த சமபவம் நடந்து முடிந்து மூன்று வருடங்கள் இருக்கலாம்.

எங்கம்மா கரப்பன்பூச்சிய கண்டாத்தான் கொல்லப் பாக்கும். அதுக சமைல்கட்டுலதான சுத்தும்! செங்கொளவி ஊட்டுக்குள்ளார கூடு வெச்சா நான் ஒடச்சிருவேன். அம்மா சத்தம் போடும்! கொளவி வீட்டுள்ள பறந்தாவே பையன் சொல்வான் “அப்பா கெழவி பறக்குறா!” அப்படின்னு! அப்புறம் துண்டுலயாச்சும் போட்டு தள்ளீர்றதுதான். (செங்கொளவிய அரைச்சு நாய்க்குட்டிக்கு பால்ல கலந்து குடுத்தா அது பெருசாகுறப்ப கடி நாயா வரும்- தகவல்)

அப்புறம் பல்லிக! இதுகளுக்குத்தான் பல்லி விழும் பயன்கள்னு பக்கமே இருக்குதே! தலையில உழுந்தா சாவாம்! மெரண்டே செத்துடுவான்ல! அதுகளை கண்டா அடிச்சுடுவேன். சுவத்துல எங்கே பார்த்தாலும் போதும் பையன் ஓடியாந்து “அப்பா முதலைப்பா!” என்பான். அதுகளை என்னதான் அடிச்சி கொன்னாலும் எப்படியும் ஒன்னு ரெண்டு இருந்து கத்திட்டேதான் இருக்குதுக சொச்சு சொச்சுனு! அதுகளை அடிக்க கூடாதுன்னு அம்மா ஆரம்பத்துல கண்டிசன் போட்டு இப்ப விட்டுடுச்சு!
இது இப்படி இருக்க மழைக்காலத்துல பச்சைப் பூச்சி லைட் வெளிச்சத்துக்கு ரெண்டு நாளாவே வந்துட்டு இருந்துதுக! அது வீட்டுள்ளார வந்தா பசுமை வீட்டுல பொங்குமாம்! கருமம்டா! என்று இரண்டு விரல்களில் கவ்விப்பிடித்து வெளி இருட்டில் வீசினேன்! “ஏப்பா கொல்லுல?” சன் கேட்டதுக்கு பசுமைப் புரட்சி நடக்கட்டும் என்றேன்.

திருப்பூரிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள பனியன் கம்பெனிகளுக்குப் படை எடுத்துவரும் வெளி மாநிலப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அவர்கள் ஒரு குடோனுக்குள் அடைந்து கிடக்க வேண்டியதுதான். உடல்நிலை சரியில்லை என்றால் மத்திரைகளைக் கொத்துக்கொத்தாய் கம்பெனியே எடுத்து நீட்டும். இதில் பெண்களுக்கு எத்தனை சிரமங்கள் இருக்கும் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளலாம். இத்தனை வருடங்கள் எங்கள் கம்பெனியில் இருந்தால் இத்தனை கிடைக்கும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

பாதியிலேயே ஓடிவிடும் பெண்களும் உண்டு.  ஊருக்கு தப்பிப் போகாமல் வேறு கம்பெனியில் நுழைந்து பணிசெய்து, தனி அறை எடுத்து தங்கி தைரியமாய் பிழைக்கும் பெண்களும் உண்டு. காதல் என்ற பூச்சி அவர்கள் வாழ்வில் நுழைந்து கருக்கலைப்பு சம்பவங்கள் நடப்பதும் உண்டு. நான் கருக்கலைப்பு பண்ணலாம்னு யோசிக்கறேண்டி என்று ஒரு பெண் தன் தோழியிடம் சொன்னால் அவளைக் காதல் பூச்சி பிடித்துவிட்டது என்று அர்த்தம்.

பனியன் கம்பெனி ஒன்றில் அந்தப் பெண்களுக்கு பாதுகாப்பாக ஒரு பெண்மணி இருப்பார். அப்படி ஹெட்டாக 20 பெண்களுக்கு ஒருவர் இருப்பார். அவருக்கு 40 வயது அல்லது அதற்குமேல் இருக்கலாம். முக அழகை மேம்படுத்தும் க்ரீம்கள், வாசனைப் புட்டிகள், உயர்தர குளியல் சோப் என்றே அவர் மெடிக்கல் கடையில் வாங்குவார். உடல்நிலை சரியில்லாத பெண்களை கம்பெனி வாகனத்தில் கூட்டிவந்து டாக்டரிடம் அழைத்துப் போய் மருத்துவம் பார்த்துப் பத்திரமாய் கூட்டிப்போவது அவர் பணி.

டாக்டர் எழுதிய மருந்துகளைப் பெண்களே மருந்துக்கடையில் வாங்கிக் கொள்வார்கள். ஒரு நாள் ஒரு பெண் மருந்துக்கடை வாசலில் மயக்கமாய் சாய்ந்துவிட்டார். பாதுகாப்புப் பெண்மணி மற்ற பெண்களிடம் எந்தவித படபடப்பும் இல்லாமல், “தூக்கிட்டுப் போய் வேன்ல போடுங்கடி” என்றது. நான் ஏதாவது செய்திருப்பேனே! என்கிறீர்களா? வெறுமனேதான் நின்றிருந்தேன். வேலியில போறதைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுக்கொண்டு பொறவு குத்துதே கொடையிதேன்னு சொல்லிட்டு இருக்க முடியுங்ளா!

செவ்வாய்க்கிழமை விஜயமங்கலம் சந்தைக்குச் சென்றால் எதோ ஒரீசா மாநிலத்திலுள்ள சந்தைக்கடைக்குள் நுழைந்தது போன்ற அனுபவம்தான் கிட்டுகிறது. சிவந்த நிறத்தில் பெண்களும் ஆண்களும் கையில் பைகளுடன் சுற்றுகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். நம் ஆட்களின் வரத்துதான் சந்தைக்கடையில் குறைந்துவிட்டது. செல்போன் கடைகளில் ரீச்சார்ஜ் செய்துகொள்ள அவர்களே கூட்டமாய் நிற்கிறார்கள். “பிப்டி ரூபீஸ் ரீச்சார்ஜ்?”, “யெஸ் யெஸ் ஹண்ட்ரட் ரூபீஸ் ரீச்சார்ஜ்!”

“ஏன் பாஸ் நீங்க ஹிந்தி கத்துக்கிட்டா இவங்களுக்கு ரீச்சார்ஜ் செய்ய ஈசியா இருக்கும்ல?”

“நான் என்ன மயிருக்கு ஹிந்தி கத்துக்கோணும்? நானா ஒரீசாவுல போயி கடைபோட்டு உக்காந்திருக்கேன்? அவனுகளுக்குத் தேவைன்னா அவனுங்கதான் தமிழ் கத்துக்கணும்!”

கூடிய சீக்கிரமாக “வெள்ளையெனே வெளியேறு!” என்று மூத்தவர்கள் குரல் கொடுத்ததுபோல், “ஓடிப் போ ஓடிப்போ! ஒரீசாவுக்கே ஓடிப்போ!” என்று போராட்டங்கள் சாலைகளில் நடைபெறத் துவங்கலாம். எண்ணிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க ஆக்கிரமிப்பில் அவர்கள் நுழைவார்கள் என்றே தோன்றுகிறது!

குட்டியூண்டு முன்பாக எப்போதோ எழுதிய கதையோடு முடிக்கிறேன்.

வாழ்க்கை

பெரியவர் சின்னண்ணனுக்கு இன்று பார்த்தால் வயது எழுபது ஆகிறது. அறுபது வயதிலிருந்தே தடி ஊன்றித்தான் ஊருக்குள் நடமாடிக் கொண்டிருந்தார். அறைகுறை பார்வைதான்.

மனைவி சுப்பக்கா இறந்துபோய் இப்போது வருடம் ஏழெட்டு ஓடிப்போய்விட்டது. மனைவி போனதிலிருந்து இவருக்கு ஒரு கை ஒடிந்துபோனது போலத்தான் ஆயிற்று. காய்ச்சல் என்று படுத்தவள்தான்… முன்றாம் நாள் பாடையில்தான் படுத்தாள்.

இருக்கும் நிலபுலனும் விதைக்க ஆள் இல்லாமல் சும்மா கிடந்தது. இவருக்கு அதுவும் வேதனைதான். பையன்கள் இருவரும் படித்து ஒருவன் வக்கீலாகவும், ஒருவன் இஞ்சினியராகவும் காரில் போய்வந்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூர் ஆலமரத்தடியில் வயதான சிலர் புகையிலை மென்றபடி, சுருட்டு பிடித்தபடி அமர்ந்திருப்பது இவருக்குத் தெரிந்தது. ஆலமர நிழல் மதிய நேரத்தில் குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.

“என்ன சுப்பண்ணா, ஞாயித்துக்கிழமை வீட்டுல ஆட்டுக்கறியும், கோழியுமா? எங்களைப் பாரு எந்த நேரமும் புலம்பல்தான். அட நிக்காமப் போறியேப்பா”

“பெரிய மருமக சக்கரை ஒருகிலோ வாங்கிட்டு வரத் தாட்டி உட்டாப்பா. சேர்ந்தாப்ல மத்தியான சோத்தை தின்னுபோட்டு வர்றேன் ‘ என்று நடையைக் கட்டினார்.
வீடு வந்தவர் தன் நிழலைப் பார்த்து சாப்பாட்டுக் குண்டானை தூக்கிக் கொண்டு சின்ன மருமகள் வீடு சென்றார். ஞாயிறு என்பதால் இரண்டு வீட்டிலும் கறிக்குழம்பு வாசனை தூக்கிற்று. இவரைப் பார்த்த சின்ன மருமகள் , “ஏன் மறந்து போச்சா? இந்த மாசத்துல இன்னும் பத்து நாள் இருக்கு. மாசமே முடியில குண்டனை தூக்கிட்டு இங்க வந்துட்டே?” என்கவும்தான், தன் ஞாபக மறதியை நொந்துகொண்டு பெரிய மருமகள் வீடு சென்றார்.

ஒன்றும் பேசாமல் மருமகள் பழைய சோத்தை குண்டாவில் கரைத்துக்கொண்டு வந்து வழிசூர இவர் குண்டாவில் ஊற்றினாள். இவர் பயந்தவாறே, “வெங்காயம் ரெண்டு இருக்குதா பாராயா” என்றார். “ வெங்காயம் இல்லீன்னா இறங்காதா? “ சப்தம் வரவும், “போச்சாது போ உடு ஆயா” என்றவர் குண்டானைத் தலும்பாமல் தூக்கிக்கொண்டு மரத்தடி சென்றார்.

முந்தையை தொடர்களின் சுட்டிகள் கீழே

https://bit.ly/2G7k8wy